Dhanush Interview In Kumudam

இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றவர்; ஆனாலும், அலட்டிக் கொள்ளாமல் நம் முகம் பார்த்துப் பேசுகிறார் தனுஷ். செல்வராகவனின் படம், தனது மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடிக்கும் படம் என்று பரபரப்பாக இருக்கிறார். வழக்கம் போலவே நம்மிடம் வெளிப்படையான பேச்சைத் தொடர்கிறார்.
இளம் வயதிலேயே தேசியவிருது கிடைச்சாச்சே, அடுத்தது என்னன்னு எல்லோரும் நச்சரிப்பாங்களே?
“எனக்கும் விருதுகளுக்கும் ரொம்ப தூரம். இந்த தேசிய விருது கிடைச்சதே ஒரு விபத்து மாதிரிதான். ‘ஆடுகளம்’ படத்துல நான் நடிச்ச கதாபாத்திரத்துல யார் நடிச்சிருந் தாலும்,விருது நிச்சயம் கிடைச்சிருக்கும். அந்த கதை, கதாபாத்திரம் அவ்வளவு பலமாக இருந்துச்சு. அது எனக்கு அமைஞ்சது என்னோட அதிர்ஷ்டம். தேசிய விருது கிடைச்சப்ப, என்னால அதைக் கொண்டாட முடியாத மனநிலையில இருந்தேன். இப்போ அது அப்படியே பழகிப் போச்சு. இந்த விருது எனக்குள்ளே எந்த மாற்றத் தையும் கொடுக்கக்கூடாது. இப்போ எப்படி இருக்கேனோ அப்படியே இருக்கணும்னு நான் விரும்புகிறேன்.’’
படிக்காத, அப்பா & அம்மா சொல் கேட்காத, வேலை எதுவும் பார்க்காத ஒரு பையனாகவே நடிச்சிருக்கீங்க. ஏன் இப்படி ஒரு ஏடாகூடமான கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறீங்க?
“என்னோட வயதை மீறியோ அல்லது உருவத்தை மீறியோ நடிச்ச கதாபாத்திரங்கள் ஒண்ணுரெண்டு இருக்கலாம். மத்தபடி என்னுடைய வயது, தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரங்களில்தான் நடிச்சிருக்கேன். படிச்ச பையன் மாதிரி நடிச்சா அது எனக்கு பொருத்தமாக இருக்காது. உண்மையில படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். என் னை மாதிரியான, என் வயதுள்ள பசங்க, அவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கக்கூடிய கதாபாத்திரங்களாக அமைஞ்சது என்னோட பலம்.
வீட்டுக்கு அடங்காம இருக்கிற பசங்க எல்லோரும் கெட்ட பசங்க இல்ல. நல்ல பசங்களாக இருந்தாலும், அவங்க வயசுக்கு அப்படித்தான் கொஞ்சம் துறுதுறுன்னு இரு ப்பாங்க. என்னோட டீன் ஏஜுல, வீட்டுல என்ன சொல்றாங்களோ அதுக்கு நேர்மாறாகத்தான் நடந்திருக்கேன். அதுக்காக நான் கெட்ட பையன் இல்ல. இப்போ எனக்கு வயசு இருபத்தெட்டு. ஒரு பையனாக இருந்து இனிமேல் ஒரு மெச்சூர்டான ஆணாக மாறுகிற அந்த மாற்றம் இப்போ நடக்குது.’’
உங்க மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷன்லேயே நடிக்கிறீங்க. ஷூட்டிங் எப்படிப் போகுது?
“ஐஸ்வர்யா டைரக்ஷன்ல நடிக்கிறது கொஞ்சம் தந்திரமான விஷயம். சவாலாக இருக்கு. கஷ்டமாகவும் இருக்கு. தர்மசங்கடமாகவும் இருக்கு. முதல்ல எதையாவது சொல்லி தவிர்க்கணும்னுதான் நினைச்சேன். கதையைக் கேட்டதும், ஒரு நியாயமான கதையை வேண்டாம்னு சொல்ற மனசு வரல.
பொதுவாக வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு நம்மோட ப்ளஸ்தான் அதிகம் தெரியும். உள்ளே இருந்து பார்க்கிறவங்களுக்குதான் மைனஸும் சேர்ந்து தெரியும். அதனால அவங்களை திருப்திப்படுத்துறது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனாலும் ஓ.கே. செட்டாயிடும்.’’
‘இரண்டாம் உலகம்’ படம் பற்றி..
“இது இன்னும் முடிவு பண்ணப்படாத டைட்டில்தான். மேலும் நாலஞ்சு டைட்டில்கள் சாய்ஸில் இருக்கு. செல்வா சாரோடு நானும் சேர்ந்து பண்ணும்போது என்னென்ன இருக்குமோ அதெல்லாம் இந்தப் படத்திலும் இருக்கும். முதல்ல செல்வா செட்டுல எனக்கு ஒரு சுதந்திரம் இருக்காது. எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பார். நான் நடிப்பேன். அவரைத் தாண்டி யோசிக்க முடியாதளவுக்கு அவர் யோசிப்பார். ஆனால் இப்போ ‘நீ நடி. நான் எடுத்துக்குறேன்’ என்ற சுதந்திரத்தை எனக்குக் கொடுத்திருக்கார். இதை மிகப்பெரிய விருதாக, கௌரவமாக நினைக்கிறேன்.’’
உங்க பசங்க யாத்ரா, லிங்கா பற்றி..
“யாத்ராவுக்கு இப்போ நாலரை வயசு. சொன்னா புரிஞ்சுக்குறார். புத்தகங்கள் படிக்கிறார். வீட்டுல இருக்குறது பிடிக்காது. அவுட்டிங் போக ஆசை அதிகம். ஷாப்பிங் போகணும்; கோயில்களுக்குப் போறது அவருக்குப் பிடிக்குது. உருவத்துல என்னை மாதிரியே இருந்தாலும், குணத்துல அம்மா மாதிரி.
லிங்கா, இவர் உருவத்துல அவங்க அம்மா, பாட்டி மாதிரி. குணத்துல என்னை மாதிரி. இப்போதான் பேச ஆரம்பிக்கிறார். ‘அம்மா…தாத்தா.. கம்.. நோ..’ எல்லாம் சொல்றார். அவங்க பாட்டியை ‘நாநா’ன்னு கூப்பிடுறார். டிரைவரை ‘பங்கா’ன்னு கூப்பிடுறார்.எழுந்து நடக்கிற ஸ்டேஜ்ஜில இருக்கிறார்.’’
சூப்பர் ஸ்டார் இப்போ எப்படி இருக்கிறார்?
“சூப்பராக இருக்கார். சூப்பர் ஸ்டாராகவே இருக்கார்.’’
Source:Kumudam